அரசாங்க அதிபரின் வாழ்த்துச்செய்த

ஆதீன முதல்வரின் அருளாசிச் செய்தி

முருகன் அடியார்க்கு ஆசிகள்:-
அச்சுவேலி காட்டுமலைப்பகுதியில் நீண்டநாளாக எழுந்தருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது. நித்திய பூசை, திருவிழா, பொது இசைநிகழ்ச்சி, ஏனைய பொது விடயங்கள் இவ்வாலயத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளாகும். இதனை உலகம் முழுவதும் வாழும் நம்மவர்கள் முருகனின் அருளைப் பெறுவதற்கு இப்பணி சாலப் பொருத்தமாகும். ஆலயம் மேலும் வளர்ச்சியடைந்து சமூகப்பணிகளை மேலெடுத்துச் செல்ல இறைவனுடைய அருள் கிடைப்பதாக. அனைவரும் முருகனை வழிபாடு செய்து மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக.
என்றும் வேண்டும் இன்ப அன்பு
இரண்டாவது குரு மகா சந்நிதானம்
சிறீலசிறீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள்
சிறீலசிறீ சுவாமிகள்


 

அரசாங்க அதிபரின் வாழ்த்துச்செய்தி


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாண மண்ணிலே வானுயர்ந்த மரங்களும் வளமிக்க தோட்டங்களும் அணிசெய்யும் அச்சுவேலியில் நாவலம்பதி என்னும் இடத்தில் தென்னிலங்கைக் கந்தனுக்கும் வடஇலங்கை சந்நிதியானுக்குமிடையில் அருட்பாலமாய் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தன் இன்று இணையத்தளமேறித் தன் அருட்காட்சிகளை அவனுக்கு அளிக்கப்போகிறார். இவ்வினிய நன்னாளில் அவனருள்மிகு வரலாற்றை அறியாதோர் அறிந்து கொள்வோம். தீராப்பிணியில் துவண்டிருந்த அருளாளராகிய சீனியரின் கனவிலே தோன்றி கதிரைமலைக் கந்தன் காட்டிய இடத்திலே எழுந்ததே காட்டுமலைக் கந்தன் கோவில். கதிரைமலைக் கந்தன் அருளால் தோன்றிய காட்டுமலைக் கந்தன் பேர் சொல்லி அணிந்த திருநீறால் சீனியர்க்கு வந்த பிணி நீங்கியது. நோய் தீர்க்கும் அருமருந்தாய்க் காட்டுமலைக் கந்தன் அருள் யாழ்ப்பாணமெங்கும் பரவியது. இனியொரு மரந்தில்லை எனக் கைவிடப்பட்ட நோயாளர்களெல்லாம் காட்டுமலைக் கந்தன் திருநீறு அணிந்தால் வந்த பிணி ஓடிவிடுமென்று அவனை நாடி வந்தனர்.


கோயிலைத் தாபித்து அச்சுவேலி மக்களுக்கு அருள்பாலித்த சீனியர் எனும் பெருந்தகையின் மறைவுக்குப் பின்னர், அவர் தம் புதல்வர்கள் ஊர்மக்களின் துணையோடு இவ்வாலயத்தைச் சிறப்புற பரிபாலித்து வருகின்றனர். நித்திய பூசைகளோடு கந்தனுக்கு வருடாந்த பதினைந்து நாள் திருவிழா மகோன்னதமாய் நிகழ்கிறது. அத்தோடு இந்துக்களுக்குரிய சிறப்பான திருநாட்கள் அனைத்திற்கும் சிறப்பான பூசைகள் செய்யப்படுகின்றன. சந்நிதியான் கோயிலைத் தொட்டுக் கொண்டாடிவரும் தொண்டைமானாறு வல்லைவெளியூடே பாய்ந்து நாவலடியில் அணை அமைத்து நிற்கும் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வற்றாத குண்டே காட்டுமலைக் கந்தனின் தீர்த்தக் கிணறாய் அமைகிறது. திருவிழாக் காலத்தில் இத்தீர்த்தக் கிணற்று நீரால் தோய்த்த திரியால் விளக்கெரியும் அற்புதமும் இக் கோயிலுக்குண்டு. காட்டுமலைக் கந்தன் கோயிலிலிருந்து அரை மைல் தொலைவிலுள்ள இத்தீர்த்தக் கிணற்றில் அடியார் புடைசூழ அரோகரா ஒலியுடன் கந்தன் தீர்த்தமாடித் திரும்பும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாம். நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குலதெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். அருளாளர் சீனியரால் பாடப்பெற்ற சில பாடல்களும் அச்சுவேலி தம்பிமுத்து பாகவதரால் பாடப்பெற்ற ஊஞ்சற் பாடலும்; இக்கோயிலின் பெருமை சொல்லும். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.
க.கணேஸ்
அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலர்,
யாழ் மாவட்டம்.

செஞ்சொற் செல்வரின் ஆசியுரை

வேலைத்துதித்தால் வேதனை இல்லை. எந்த ஆரம்பித்திலிருந்தும் எமைக்காக்கும் சக்தி கந்தப் பெருமானின் வேலுக்குண்டு. எம்முன்னோர் முருகா முருகா என்று உச்சரித்து கந்தப் பெருமானை வணங்கி கவலையற்று வாழ்ந்தனர். எமது பாரம்பரிய வழிபாட்டு மரபில் எழுந்த உன்னத ஆலயங்களில் நாவலம்பதி காட்டுமலைக் கந்தன் கோவிலும் சிறப்புக்குரியது. தீராத நோய்களெல்லாம் தீர்த்த அற்புத தெய்வம் குடி கொண்ட கோயில். ஆண்டு தோறும் அடியவர்கள் கூடி பல்வேறு திருப்பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். சித்திரத்தேர் முதல் அற்புதத் திருப்பணிகள் பல நிறைவு பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் காட்டுமலைக் கந்தப்பெருமானின் பக்தர்கள் இணையத்தளம் மூலமாகத் திருக்கோவிலைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அறிந்து மிகவும் ஆனந்தமடைகின்றேன். இப்பணி மிகவும் பயன் தரும் பணி எனலாம். வரலாற்றுப்பணி. பலர் இத்திருக்கோவில் சிறப்பை அறிய ஏதுவாக அமையும் நற்பணி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவருள் அனைவருக்கும் காத்தருள வேண்டி வாழ்த்தும் நல்லாசியும் கூறி அமைகின்றேன்.
ஆறு.திருமுருகன்,
தலைவர்
சிறீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை,
இலங்கை.

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் அமைந்த தலம் நாவலம்பதி !!!
-கலாபூணம், வில்லிசைப்புலவர் க. நா. கணபதிப்பிள்ளை (சின்னமணி)


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் அறஎன் றறுமே
அம்மா பொருளொன் றுமறிந்திலனே


பரம்பொருளின் பெரம் புகழைப்பாடிப் பரவிய அடியார்கள் அனுபூதி அடைந்தார்கள். அடியார்கள் வாழ்வில் அல்லல் நீக்கி ஆக்கம் தருபவன் ஆறுமுக வள்ளல். ஆறுமுக வள்ளலின் ஆராத காதல் கொண்டு அரும்பெரம் தமிழ்ச்செல்வங்களெல்லாம் அறிவுடைப் பெரியோர் எமக்குத் தந்து போயினர் அந்த வரிசையிலே


எந்தாயும் எனக் கருள்தந் தையும் நீ
சிந்தா குலமா னளவதீர்தி தௌனயாள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே


என்று நாளும் பரவி நலம் பல பெறுபவர்கள் நம் நாவலம்பதி வாழ்மக்கள் உதயக்காலம் நான்கு மணிக்கு ஊசையிடும் மணியோசையுடன் எழுந்து நித்திய கருமங்களைத் தொடங்குகின்ற பண்பாளர்கள் இவர்கள்.


பஞ்சம் படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி கிளியே
ஆறுமுகள் தஞ்சமெடி

கலியுக வரதன் கந்தன் தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் து}யவராகி மேலைத் தொல்கதி அடைவர். எனப் போதிக்கின்றது கந்தபுராணம். கந்தபுராணத்தின் மகிமையைக் கண்டறிந்த மக்கள் இவ்வூர் மக்கள் - எக்கருமம் செயினும் வாயில் முருகா எனும் நாமம் செப்புகின்ற சிந்தையர்.நாவலம்பதி வாழ்மக்களின் பழக்கம் ஒழுக்கமெல்லாம் கந்தபுராணக் கலாசாரத்தைப் பின்பற்றியதாகவே காணலாம். சிறு ஆலயமாகவிருந்து இன்று அலங்காரமாக வானுயர்ந்த ஆலயமாகத் திகழ்வதற்கு காரணமானவர்களும் இவ்வாலய அறங்காவலர்களும் இவ்வூர் மக்களுமே என்றால் மாறுபாடு உண்டோ.

இரபத்தைந்து நாள் மகோற்சவத்தைக் கொண்ட நாவலம்பதி முருகன் எல்லாச் சிறப்புக்களுடனும் இவ்வூர் மக்களால் வழிபடும் திறன் கண்டு வியப்பாருண்டு. சாதாரண பொருளாதார வசதியுடன் மிளிரும் இவ்வூர் மக்கள் தாராள அற்கொடை மூலம் ஆலயத்தை ஆதரித்து வருகின்றனர். விவசாயத்தையே முற்றுமுழுதாக நம்பியிருக்கும் கிராமமக்கள் கலியுக வரதன் கந்தனே தங்கள் பாதுகாவலன் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்து வரும் சிறப்பு சொல்ல முடியாத சிறப்பு. இவ்வாலய வளர்ச்சிக்கு அருள்மிகு சிவகுரு ஐயாவின் தொண்டு மறக்கற்பாலதோ? குழந்தைகளையும் ஆலயக்கடமைகளைச் செய்துவைக்க ஏதும்; சிந்தையர் - தன்வழியே தன்பிள்ளைகளையும் நெறிப்படுத்தி ஆலயத்தொண்டில் ஈடுபடவைத்த பெருமகன். தந்தை வழி தனயாக்கன் என்பதற்கு இலக்கணம் கண்டவர்கள் தாம் இவர்கள். மேலும் இவ்வாலயம் வளரவும் கந்தவேள் கருணை பூக்கவும் எம்பெருமான் திருவருளை நாடுகின்றேன்.

 

இணையத்தில் உலாவரும் காட்டுமலைக்கந்தன் -கோப்பாய் பிரதேச செயலர் திரு மோகன்றாஸ்

கோப்பாய் பிரதேசத்தின் வளம்பல பெருகும் அச்சுவெலிப் பகுதியில்; கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அமைந்துள்ள நாவலம்பதியில் குடியிருக்கும் காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம்வர இருப்பது உலகம் முழுவதிலுமுள்ள முருகன் அடியார்களுக்கு வரப்பிரசாதமாகும். எண்பது வருட சரித்திரத்தையுடைய இந்தக் கோவில் கதிர்காமக் கந்தனின் அருளால் நிறுவப்பட்டது. தீராத நோயால் துன்பப்பட்ட அடியவர் ஒருவரின் கனவிலே முருகன் தோன்றி புனிதமான ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீரும் எனக் கூறியதாகவும் அதற்கிணங்க நோய் குணமடைந்தது எனவும் இக் கோயில் வரலாறு கூறுகிறது. சிவன், விநாயகர், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் திருக்கோவிலிலே வருடாந்த திருவிழா உட்பட ஏனைய விசேட உற்சவ தினங்களிலும் திருவிழாக்கள் செய்யப்படுவது சிறப்பான விடயமாகும். இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
 

காட்டுமலைக் கந்தசாமி இணையத்தளத்திற்கான வாழ்த்துச் செய்தி

வலி கிழக்கு பிரதேசத்தில் அச்சு நகர் கிராமத்தின் தலைசிறந்த ஆலயங்களில் காட்டுமலைக் கந்தசாமி கோயிலும் சிறப்பானது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமையப்பெற்ற கந்தன் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். தென்னம்பொழில் சூழ் தெவிட்டா வேலனிவன் வந்தோற்கு வகை கூறும் கூர்வடிவேலனின் அன்பரின் ஆழ்மனதில் ஆனந்தம் பூத்திடுவான்.அடியார்களின் நலம் பேணும் காட்டுமலைக் கந்தனவன் மயிலேறி தேரேறி மானிடர் துயர் தீர்ப்பான். கந்தனிவன் விபூதியில் விரல் தொட்டால் வினைகள் எல்லாம் தீர்த்திடுவான். தீர்த்தத்தின் மகிமையால் திக்கெட்டும் புகழ்பரப்பி பாரின் நலன் ஓங்க பசுமை எங்கும் காட்டிடுவான்.சீனியர் சிவகுருவின் சிந்தையால் வானுயர்ந்த கோபுரத்தில் வீற்றிருந்து கொடுவினை அறுத்திடும் கோலமயில்க் காட்டுமலைக் கந்தனின் இணையத்தளத்தினை அமைப்போருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகுக.
திருமதி. K. மாலினி
கலாசார அலுவலர்
வலிகிழக்கு - கோப்பாய்

இணையத்தள ஆசிரியரின் செய்தி


வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக் கந்தன் புகழைப்பரப்புவதில் இத ஒரு கன்னி முயற்சி. கந்தனின் அடியார்கள் உலகமெங்கும் பரந்துள்ள காட்டுமலைக் கந்தனின் அடியார்கள் இவ் இணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்வார்கள். என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. தற்காலத்தில் எத்துறையிலும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் உட்புகுந்து செல்கையில் முருகனின் அருளைப் பரப்புவதிலும் அதனைப் பரப்புவது காலத்தின் கட்டாயத் தேவை இந்த முயற்சி ஊர்கடந்து நாடுகடந்து காட்டுமலையானை மனக்கண்ணில் கொண்டு வழிபடும் அடியார்க்கு ஏதோ ஒரு வகையிலேனும் அவர்களது குறையைத் தீர்க்கும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

ஓம் முருகா ஓம் முருகா என கோயில் சுற்றாடல் ஓங்கி ஒலிக்கும் பக்தர்களின் கூவலும் முருகப்பெருமானின் கண்கொள்ளாத் திருக்காட்சி உலகமெங்கும் உள்ள கந்தனின் அடியார்க்கு இவ் இணையத்தளத்தின் மூலம் கிடைக்கப் பெறுவது உறுதி.இத்தளத்தின் மூலம் காட்டுமலைக் கந்தனின் வரலாறு, கோயில் சம்மந்தமான படங்கள், பல்வேறு காலங்களில் இறைவன் எழந்தருளிய திருக்கோலங்கள், இறைவன் மீது பலராலும் பாடப்பட்ட பாடல்கள் என்று காட்டுமலைக் கந்தன் பற்றிய அனைத்து தகவல்களையும் அறியாமல் உலகளாவிய ரீதியில் சான்றுபடுத்தி பாதுகாக்கும் முயற்சி இதுவாகும். இதற்கு அடியார்களின் ஒத்துழைப்பு பலவழிகளிலும் வேண்டப்படுகிறது.இவ்முயற்சி ஒரு ஆரம்பம் மட்டுமே இத்தளத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் அடியார்களாகிய உங்களிடம் இருக்கலாம். அவற்றைத் தந்துதவிக் கந்தனின் பெருமை ஆண்டாண்டு காலம் நின்று நிலைக்க உதவி செய்யுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் கிடைத்த, கிடைத்தற்கரிய பேறுகளில் ஒன்றாக நான் கருதுகின்றேன். இது 10 - 14 நாட்களில் என் மனதில் தோன்றி வடிவம் பெறுகிறது. இதற்கு அருளிய காட்டுமலைக் கந்தப்பெருமானுக்கு என்றும் நன்றியுடையவன் நான், மேலும் இதற்கு அனுமதியளித்த ஆலயத்தின் பிரதம குருவும் தர்மகர்த்தாவுமாகிய திரு.சிவகுரு சிவசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும் விடயங்களைப் பெறுவதற்கு உதவி செய்தவர்கட்கும் உளரீதியாக ஊக்கமளித்த எனது நண்பர்கள் போன்ற அனைவருக்கும் இவ் இணையத்தளத்தை திறம்பட வடிவமைத்துத் தந்த Speed IT net  ஸ்தாபனத்தாருக்கும் இவ்வேளையில் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.


-காட்டுமலைக்கந்தன் புகழ் உலகமெங்கும் பரவட்டும்-


திரு. நா. மகேந்திரராசா
இணைய ஆசிரியர்.
தொடர்புகளுக்கு:- தொலைபேசி இல :
060 221 6755
mahendrarajah22@hotmail.com


 


 

 

அரசாங்க அதிபர்

 நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆதீன முதல்வர்

அச்சுவேலி காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது

பிரதேச செயலர்

இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இணையத்தள ஆசிரியர்

வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள் இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை.
 
 

காப்புரிமையாவும் ©காட்டுமலைக்கந்தன் ஆலயத்திற்குரியது.2009 | Site Design By Speed IT net