காட்டு மலைக் கந்தவேள் கலக்கமெலாம
காட்டு மலைக் கந்தவேள் கலக்கமெலாம் தீர்ப்பான்


சைவத்தை வளர்ப்போம் என்ற சால்பினர் பலரும் வாழும்
மெய்வளர் பதியாம் அச்சு வேலிநற்பதியின் கண்ணே
வையகம் போற்றும் காட்டுமலைக் கந்தன் கோயில் உண்டு
தெய்வநல் அருள் பெற்றோர்கள் சீர்மிகுவீடு சேர்வர்.

நாவற்கா டுறையும் கந்தன் நல்லடியார்கட் கெல்லாம்
பாவத்தைப் போக்கவென்றே பயன்படு விபூதியுண்டு
நோவுற்றோர் தங்கட்கெல்லாம் நல்லருள் கந்தன் செய்வான்
பாவினால் கந்தன் மேன்மை பாடுவார் அடியார்கூடி

எஞ்சலில் புகழ்சேர் கந்தன்
இவர்ந் தருள்செயற் கேஆன
மஞ்ச வெள்ளோட்டம் காண
அன்பரீர் திரள்வோம் நாமே
அஞ்சிடும் நிலைகள் நீங்க
அகமதில் அமைதி தோன்ற
நெஞ்சுவந் தவன்பா தங்கள்
நித்தமும் வணங்குவோமே

பார்வதிநாதசிவம்
(ஈழநாடு ஆசிரியப் பகுதி)

 

காட்டுமலைக் கந்தமணியே!
- கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை

நாவற் பழமீந்த ஞானப் பழமுனக்கு
நாவற் பதிமீதே நற்கோட்டம் - பூவின்கண்
தந்த தவத்தழகைச் சார்ந்ததுதேர் சால்பு மஞ்சம்
தந்தார் திருவருளே தா.

கஞ்சமலர் மேவுமுயர் சரவணப் பொய்கைதனில்
கனிந்தகன லாறுபொறியே
கவினார்ந்த நாவலம் பதிதனிலே கலைகொண்ட
காட்டுமலைக் கந்தமணியே!
விஞ்சுகலை கொஞ்சுமெழில் மஞ்சமதி லேறியிதம்
விளைகின்ற பக்திமய மெய்யன்பை விழித்திடும்
விரிவார்ந்த சோதிமணியே!
தஞ்சமெனும் அடியார்க்குத் தாயாகித் தந்தையாய்
தாங்குமுயர் சைமணியே!
தானென்ற சூரனைச் சங்காரம் செய்தவுயர்
சக்திநிறை சர்வமணியே!
அஞ்செலென எஞ்ஞான்றும் அபயங் கொடுத்திடும்
ஆறுமுக மானமணியே!

ஆனந்தக் காட்சிதரும் அன்பார் அழகாவுன்
ஞானத்தேன் பெற்றவுயர் நல்லடியார் - தானத்தை
நோக்கி உயர்வுற்ற நுட்பத் திருமஞ்சம்
ஆக்கி உவந்தார் அருள்.
 
காட்டுமலையானே!
காரை. செ.சுந்தரம்பிள்ளை

வெண்பா
காட்டு மலையானே கந்தா கடம்பாதென்
னாட்டு மலையானே நற்குமரா - ஈட்டுகலைச்
சித்திரத் தேரேறுஞ் செவ்வேளே நின் கருணை
முத்திரையே வேண்டும் முதல்.

விருத்தம்.
நாடுபுகழ் நாவலம்பதியிலே பக்தர் நலிவின்றி வாழவருள்புரிகின்ற முருகா
நாடுமடி யார்களிடர் ஓடவுளம் பூக்கும் ஞானகுரு வானவடி வேலவா போற்றி
தேடியெமை யாள்கின்ற தெய்வமே ஞானச் சிவசுப்பிர மணியனே சிறீகந்த வேளே
வாடிமெலி கின்றபோ தாட்கொள்ள வேண்டும் வள்ளிமண வாளனென வந்தபெரு மானே

சங்கரன் நெற்றியிற் கனலாகத் தோன்றிச் சரவணப் பொய்கையில் தமிழ்த்தெய்வ மான
செங்கதிர் மேனியன், ஈராறு வீரத் திண்புயம் கொண்டுவே லொன்றை யெடுத்துப்
பொங்கிய ஆணவச் சூரனை வீழ்த்திப் புகழ்மிக்க அமரர்தம் ஆபத்தை நீக்கி
மங்கையர்க் கணிதேவ யானையைச் சேர்ந்த மணாளனின் சித்திரத் தேர்காண வாரீர்.

ஆதியாய் அந்தமாய் அநாதியாய் எங்கள் அன்னையாய் அப்பனாய் அனைத்துமாய் நாளும்
பேதியா தாள்கின்ற பிரணவப் பொருளே பேரிடர் தீர்க்கின்ற பேரொளிப் பிழம்பே
வாதிட்ட ஓளவையின் தமிழுண்ட சேயே வானவர் துயர் கொண்ட வச்சிர வேலே
சோதியே நாவலம் பதிமேவு கின்ற சுந்தரக் கந்தனே (இ)ரதமேறி யருள்வாய்.

பனிசிந்து மலர்கொண்டு பதம்போற்று வார்க்குப் பவம்போக்கி யருள்கின்ற பார்ப்பதி மைந்தன்
கனிசிந்து மலைவாழும் கலியுகக் கந்தன் கற்பூர தீபத்திற் களிகொள்ளும் வேலன்
தனிநின்று மனம்வாடு மடியார்கள் நெஞ்சில் தணியாத ஒளியான தயாவான செல்வன்
தினையுண்டு மனங்கொண்ட சித்திரத் தேரோன் தெருவீதி வருகின்ற அணிகாண வாரீர்!

அச்சம் தவிர்க்கின்ற வேல்கொண்டு வருவான் அடியார்க்கு நல்லவன் அருள்மாரி பொழிவான்
இச்சைக் கிலக்காகி வாழ்கின்ற எம்மை ஈடேறச் செய்கின்ற உபாயங்கள் சொல்வான்
பச்சைமயில் மீதினில் ஊர்வலங் கொள்வான் பக்தர் மகிழ்ந்திடத் தேரேறி யூர்வான்
கச்சிளங் கொங்கைகுற வள்ளிமண வாளன் காட்டுமலை மேவுதமி ழான முரு கோனே

நுங்குகள் கற்பகத் தருமீ திருக்க நுகர்கின்ற அணில்சென்று நுட்பமாய்க் கோதிப்
பங்கிட்டுத் துணையோடு பகிர்ந்துண்ணு கின்ற பண்பட்ட நாவலம் பதியிலே பச்சைத்
தெங்கிளஞ் சோலைகள் எங்குமே சூழும் தெவிட்டாத நற்கனித் தோட்டங்கள் வாழும்
சங்கினம் முத்தீனும்: தமிழ்ப்பாடல் கேட்டுத் தரையெங்கும் பயிர்பச்சை பூத்துச் சிரிக்கும்.

காட்டுக் கதிரைமலைக் கந்தனைப் போலோர் கண்கண்ட தெய்வமிப் புவிமீதில் இல்லை
ஆட்டும் பெரும்பாவச் சுமைநீக்கு கின்ற ஐயனை அப்பனை ஆனந்தத் தேனை
ஈட்டும்நற் புண்ணியத் தால்நாவ லு}ரில் (இ)ரதமேறி வருகின்ற ஓராறு முகனை
நாட்டுக்கோர் தெய்வமாய் வாய்த்தநற் சேயை நாவார வாழ்த்தி வணங்குவோம் வாரீர்.

வெண்பா
நாவற் பதிமேவும் நற்குமரன் தேர்க்காட்சி
யாவர்க்கும் வாய்க்கா தருங்காட்சி – தேவர்க்கும்
கிட்டாத பேறு கிடைத்ததே: ஆகையினால்
விட்டோடிற் றேபாவ வேர்.

 
சித்திரத்தேர் காண்போம்
கவிஞர் இ.நாகராஜன்

வாட்டம் கொண்ட வாகனத்தோர் வாழ்வு கொள்ள விமலர்விழி
மூட்டும் ஆறு பொறியாகி முருகார் அச்சுவேலியைச்சேர்
காட்டுமலையிற் குடியிருக்கும் கந்த வேலர் சித்திரத்தேர்
ஓட்டம் காணக் கூடியருள் ஒளியிற் குளித்தே உய்திடுவோம்.

“காட்டு மலைசேர் கந்தா! நின் கரணை ஒன்றிங் குளதாயின்
வாட்டும் துயரம் போகு” மென வண்ணத் தமிழில் அடியவர்கள்
பாட்டே இசைக்க பக்திமையில் பழுத்தோர் வாழ்த்தச் சித்திரத்தேர்
ஓட்டம் காண்போம் ஓயாதிங் குறுத்தும் வினையை ஓட்டிடுவோம்

கற்பூ ரத்தின் ஒளிபொங்கக் கண்ணீர்க் கடலாய்ப் பெருக்கெடுக்க
நற்பா நாத ஒலியுடனே நண்ண நாதா! வென்றடியார்
பொற்பூர் தேரிற் பொருந்திவரும் புனிதக் கந்தன் அருள் கொள்ளும்
சிற்பத்திறனார் தேர்காணச் செல்வீர் அருளைச் சேர்த்துய்வீர்.

“கந்தா கடம்பா கைலாயன் கவினார் விழியின் பொறியாகி
வந்த முதலே வல்லசுரன் மாயை தீர்த்து மயில் செய்த
செந்து}ர்க்குமரா செவ்வேலா! சிறுமை தீர்க்கும் காட்டுமலை
மைந்தா” எனவே மக்களெலாம் வழுத்த வண்ணத் தேரிவர்ந்தான்.

சந்திர னுடனே சூரியனும் சகடமாகிச் சுழன்றுவர
அந்தமொ டாதி இல்லாத ஆகமம் அசுவமெனவாக
இந்திரன் தேவர் இறைஞ்சிடவே எழிலார் அயனார் செலுத்திவரும்
சுந்தரத் தேரின் தலைவனையே துதிக்க அடியார் சூழுகிறார்.

எந்திரங் கொண்டே வானகத்தே இலங்கும் மதியிற் கால் வைத்த
இந்தவுலகில் இன்றைக்கும் இறைவன் அருளே சதமென்று
நொந்தே அடியார் விதந்துரைக்க நுண்ணிடைத் தெய்வி வள்ளியுடன்
கந்தன் காட்டு மலைப்பதியிற் கவினார் தேரில் வருகின்றான்.

கலைக்கோர் சின்னம் அதுவாகக் காட்டுமலைசேர் கந்தனுக்கு
நிலைத்த தேரை அமைத்திடவே நெஞ்சம் கொண்டே நிதமுமிங்கே
அலைந்தே உழைத்த அடியவரின் ஆக்க ஊக்க அதுவாக
கலைத்தேர் காண்போம் காட்டுமலைக் கந்தன் அருளை உளங்கொள்வோம்.

நானென தென்னும் அகங்கார மமகா ரங்கள் நாசமுறத்
தேனெனும் தமிழில் திருப்புகழே சேர்ந்தே ஒலிக்கத் திவ்வியசீர்
ஞான வள்ளி தெய்வானை நாயகி நாதன் நற்தேரில்
வானகத் தேவர் மண்ணவர்கள் வாழ்த்த வீதி வருகின்றான்.

சித்திரத் தேரைக் கண்காணச் சிந்தை வாட்டும் துயர்தீர
நித்திய வாழ்வில் நிலைகொள்ள நிமலர் நெற்றி விழிவந்த
புத்திர னான கந்தனுறை புகழ்சேர் காட்டு மலைஏகி
இத்தரை வந்த பயன் கொள்வோம்: இறைவன் அருளால் நிறைகொள்வோம்.

 
கோலத்தேரில் குமரன்
கவிஞர் வே. ஐயாத்துரை

நீலகண்டனுக்கு நிகர் நேத்திரத்தால் வந்துதித்த
பாலகனை வேண்டிடுவோம் பார்தனிலே – கோலமயில்
ஏறும் குமரனுக்கே ஏற்றபெருந் தேர் சமைத்தார்
ஊறும் கருணைதனில் ஊர்.

காட்டுமலை தன்னிலருள் கூட்டுமுயர்க் கந்தனைக் கருதுவோம் காதலுடனே
வாட்டுபிணி போக்குமரு மாமருந் தேயவன் மங்காத கருணை மழையே
நாட்டுவள மூட்டுதுணை காட்டுமெழில் நாதனே நம்பினோர்க் கின்ப வடிவே
கூட்டமிக வேயடியவர் கொண்டாடு வேலவனைக் குணமார வாழ்த்துவோமே.

தெங்குவிரி சோலையெழில் பொங்குபதி தன்னிலே திருநடம் செய்யு மழகை
தங்களுள மீதினில் தாங்கவரு மடியவர்க்குத் தண்ணருள் புரியும் வடிவேல்
பங்கமுறும் அன்பர்க் கின்பநிலை நல்கிடும் பரமபதி தந்த முதலே
பொங்குபதி காட்டுமலைக் கந்தனெனப் போற்றிடும் பூரணா னந்த பொருளே!

பேதமெதும் இல்லாத பித்தனின் நெற்றியிற் பிறந்ததோர் ஆறுபொறியே
சீதமெழும் சரவணப் பொய்கையிற் செறிவுறத் திகழ்ந்ததோர் ஆறு சுதனே
பாதமிரு போதமென பன்னிருகரங்களுடன் பரந்தசீர் ஆறு முகனே
வேதமெழு காட்டுமலைக் கந்தனென விளங்கியே விளையாடு விண்ணி னமுதே.

ஓங்கார நாதமெழு உண்மைநிறை பக்தரின் உள்ளத்திலாடும் உயிரே!
ஆங்கார சூரனின் ஆணவ மடக்கியே அமரரைக் காத்த வடிவே
தீங்கான நாதமொடு சோலைமலை சூழ்ந்தாடி சித்திதரு செம்மை முதலே
பாங்கான காட்டுமலைக் கந்தனெனப் பன்னிடும் பாவாணர் போற்றுபரனே!

உழவாளர் தொழிலாளர் உரையாளர் கலையாளர் உழைப்பினால் உயர்ந்த தேரில்
அழகான முருகனே ஆரோ கணித்திடும் அமைப்பான காட்சி தனிலே
இளகாத இதயமும் இல்லையென்று கூறுதற்கிடமீயும் அன்பு மயமே
விளைவோங்கு காட்டுமலை கந்தபதி தன்னிலே விளங்கிடும் விந்தை மிகவே.

சங்கநா தத்தினொடு தண்டமிழ்க் கீதமும் சதங்கையொலி குழலோ சையும்
துங்கநா தம்பொலியும் மேளமும் தாளமும் சுவையூட்டு மணியோ சையும்
பொங்குமா கரகமுடன் காவடிக ளாட்டமும் பூக்குமுயர் அன்பூட் டமும்
சங்கையாய் நிறைந்திடக் காட்டுமலைக் கந்தனின் தலமீது தேரோ டுமே.


 
 
 
 

அரசாங்க அதிபர்

 நாவலம்பதி காட்டுமலைக் கந்தனை குல தெய்வமாய்க் கொண்டு வாழும் அக்கிராம மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் அவனருள் நாடி வருகின்றனர். இயற்கைச் சூழலில் எழந்தருளியுள்ள காட்டுமலைக் கந்தனை கண்குளிரக் கண்டு கவலையெலாம் தீர்த்து மெய்யுருகப்பாடி மேன்மை பல பெறுவோம் என்று உலகெங்கணுமுள்ள கந்தன் அடியார்களை அன்போடழைக்கும் இணையத்தள நிகழ்வுகள் சிறந்து நிலைபெற அவனருள் வேண்டி வாழ்த்துகின்றேன்.

ஆதீன முதல்வர்

அச்சுவேலி காட்டு மலைப் பகுதியில் நீண்ட நாளாக எழுந்த ருளியிருந்து அருளாட்சி புரியும் முருகப்பெருமானின் திருவருளை அனைவருக்கும் பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளம் மூலமாக அனைவரும் அறிந்து கொள்ளும்; வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. பக்தி நாட்டின் வெளிப்பாடாகிய இவ்வாலயம் பல ஆண்டுகளாக அச்சுவேலி பிரதேச மக்களின் வழிபாட்டிற்குரிய ஆலயமாகும். இவ் ஆலயம் செயற்படுவது வரவேற்கத்தக்கது

பிரதேச செயலர்

இப்பதியில் காணப்படும் புனிதமான குண்டு ஒன்று எப்போதும் நீர் சுரந்து கொண்டிருப்பது போல முருகனின் அருளும் எப்போதும் பக்தர்கள் மேல் சொரிந்து கொண்டிருக்கிறது. அக்குண்டில் உள்ள நீரில் திரி தோய்க்கப்பட்டு கொடியேற்றத்திலிருந்து திருவிழா முடியும் வரை அத்தீர்த்தத்திலேயே விளக்கு எரிக்கப்பட்டது. காட்டுமலைக் கந்தனின் அருட்திறத்தையே காட்டுகிறது. இத்தகைய பெருமைகள் சேர்ந்த காட்டுமலைக்கந்தன் இணையத்தளத்தில் வலம் வந்து அனைவருக்கும் அருள் சொரிய கந்தனைப் பிரார்த்திப்பதோடு இதற்கு முன்னின்று உழைத்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.

இணையத்தள ஆசிரியர்

வேண்டியவருக்கு வேண்டியவை அருளி நாவலம்பதியிலே அருளாட்சி புரியும் எங்கள் காட்டுமலைக்கந்தனின் புகழினைப்பரப்புவதில் இது ஒரு கன்னி முயற்சி உலகமெல்லாம் பரந்துள்ள காட்டுமலைக்ந்தனின் அடியார்கள் இவ்விணையத்தளத்தின் மூலம் காட்டுமலையில் நடப்பனவற்றை உடனுக்குடன் அறிந்துகொள்வார்கள் என்பதில் வேறுகருத்துக்கு இடமில்லை.
 
 

காப்புரிமையாவும் ©காட்டுமலைக்கந்தன் ஆலயத்திற்குரியது.2009 | Site Design By Speed IT net